ஐஐடி நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு சண்டீகர் மாணவர் சர்வேஷ் மெகந்தி முதலிடம் | ஐஐடி மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு (ஜெஇஇ அட்வான்ஸ்டு) முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், சண்டீகர் மாணவர் சர்வேஷ் மெகந்தி அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். என்ஐடி, ஐஐஎஸ்சி, ஐஐடி, ஐஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிஇ, பிடெக் படிப்புகளில் சேர ஜெஇஇ என்ற நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இது, மெயின், அட்வான்ஸ்டு என 2 தேர்வுகளை உள்ளடக்கியது. ஜெஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் என்ஐடி, ஐஐஎஸ்சி, ஐஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேர்ந்துவிடலாம். ஆனால், ஐஐடி-யில் சேர விரும்புவோர் 2-ம் நிலை தேர்வான ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அட்வான்ஸ்டு தேர்வுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில், ஜெஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு கடந்த மே 21-ம் தேதி நடைபெற்றது. சென்னை ஐஐடி நடத்திய இத்தேர்வை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 540 பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: ஜெஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வில் ஒரு லட்சத்து 59 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். அதில், 50,455 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் சர்வேஷ் மெகந்தி (சண்டீகர்) முதலிடம் பெற்றுள்ளார். பெண்கள் பிரிவில் ரம்யாவுக்கு (மதப்பூர் – தெலங்கானா) முதலிடம் கிடைத்துள்ளது. தேர்வில் தகுதிபெற்றவர்களில் 23,390 பேர் பொதுப்பிரிவின் கீழும், 9,041 பேர் ஓபிசி பிரிவின் கீழும், 13,312 பேர் எஸ்சி பிரிவின் கீழும், 4,710 பேர் எஸ்டி பிரிவின் கீழும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஐஐடி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தகுதிபெற்றவர்கள் ஆவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களில் 86 சதவீதம் பேர் (43,318 பேர்) மாணவர்கள். எஞ்சிய 14 சதவீதம் (7,137 பேர்) மட்டுமே மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அகில இந்திய அளவில் 26-வது இடம் பிடித்த சென்னை மாணவர் அர்ஜுன் பரத் தமிழக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவர் தேசிய திறந்தநிலை பள்ளியில் பிளஸ்-2 பயின்றவர். 40-வது ரேங்க் பிடித்த மற்றொரு சென்னை மாணவர் கவுதம். இவர் 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு விபத்தில் பெற்றோரை இழந்தவர். தாய்-தந்தை இருவரும் டாக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் சென்னை ஐஐடி உட்பட மொத்தம் 23 ஐஐடி கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பிடெக் படிப்பில் 10 ஆயிரத்து 752 இடங்கள் இருக்கின்றன. அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தரவரிசைப்படி கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும். அகில இந்திய அளவில் 26-வது இடம் பிடித்த சென்னை மாணவர் அர்ஜுன் பரத் தமிழக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவர் தேசிய திறந்தநிலை பள்ளியில் பிளஸ்-2 பயின்றவர்.
Thanks kalvisolai