சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகம், புதிய சீருடைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்று வாழ்த்துக் கூறி, புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கினார்.
அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு ஒரு வாரத்திற்குள் இலவச பேருந்து பயணச்சீட்டு, புத்தகப்பை உள்ளிட்டவை வழங்க அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியாவது குறித்து பதிலளித்த அமைச்சர், மாணவர்களின் நலனுக்காகவே கல்வித்துறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாக கூறினார். மேலும், ஆசிரியர் நியமனம் உள்ளிட்டவை வெளிப்படை தன்மையுடன் நடந்துள்ளதாகவும், சிறந்த முறையில் கல்வி வழங்க ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வருகிற 15ஆம் தேதி நடைபெறும் பள்ளிக்கல்வித்துறை மாநாட்டில் பல்வேறு திட்டங்கள் வெளியாகலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் மற்றும் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளை தமிழக பள்ளி தேர்வு ஆணையம் அறிவித்தது. மாணவர்களின் மன உளைச்சலை குறைப்பதற்காகவே இந்த முடிவெடுக்கப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thanks: Samayam.com