ஜூன் 13-க்கு பிறகே ‘நீட்’ தேர்வு முடிவு | ‘நீட்’ தேர்வு முடிவுகள் வரும் 13-ம் தேதிக்கு பிறகு வெளியாகலாம் என சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (‘நீட்’) கடந்த மே 7-ம் தேதி நடைபெற்றது. ஜூன் 8-ம் தேதி முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் விநியோகம் செய்யாததால், நீட் தேர்வை ரத்து செய்து, ஒரே மாதிரியான வினாத்தாளின் அடிப்படையில் மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த சந்தியா உட்பட 9 மாணவர்களும், திருச்சியை சேர்ந்த மலர்கொடியும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், நீட் தேர்வு முடிவு வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து மே 24-ம் தேதி உத்தரவிட்டது.. இந்நிலையில், தடையை நீக்கக் கோரி சிபிஎஸ்இ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது வரும் 12-ம் தேதி விசாரணை நடக்கவுள்ளது. அப்போது நீட் தேர்வு முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடை நீக்கப்படலாம் என சிபிஎஸ்இ தரப்பில் எதிர்பார்க்கப்படு கிறது. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து ஜூன் 13-ம் தேதிக்குப் பிறகே நீட் தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன